Thursday, October 25, 2012

கள்ளழகர்-அழகர்கோவில்

கள்ளழகர்-அழகர்கோவில் 
"ஆண்டாள் சூடிய அரங்கா' என்று ஸ்ரீரங்கநாதரைப் போற்றுவர். அழகர்மலை கள்ளழகரும், ஆண்டாள் சூடிய மாலையுடன் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர், அழகராக வந்து ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். தன் மகளை பெருமாளுக்கு மணம் முடித்து கொடுத்த பெரியாழ்வாரும் அழகர்கோவிலிலேயே முக்தி பெற்றார். அவருடைய திருவரசு (நினைவிடம்) அழகர்கோவிலில் உள்ளது. 

Wednesday, October 17, 2012

லட்சுமண்ரேகா


லட்சுமண்ரேகா
சீதை கேட்ட மாயமானை ராமன் பிடிக்கச் சென்ற போது, மானாக வந்த மாரீசன்""ஹா சீதா! ஹா லட்சுமணா! '' என்று ராமனைப் போலவே கூக்குரல் கொடுத்தான். இதைக் கேட்ட சீதை, மாரீசனால் அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று துடித்தாள். ராமனைக் காப்பாற்றச் செல்லும்படி லட்சுமணனை வேண்டினாள். லட்சுமணன் சீதையிடம், ""ராமனைக் காப்பாற்ற யாரும் தேவையில்லை. அரக்கர்கள் உலவும் காட்டில் உங்களுக்குத் தான் பாதுகாப்பு வேண்டும்'' என்று சமாதானம் செய்தான். ஆனால், சீதை ஒத்துக்கொள்வதாய் இல்லை. வலுக்கட்டாயமாக லட்சுமணனை அனுப்பிவைத்தாள். அப்போது லட்சுமணன் பாதுகாப்புகருதி, தன் அம்பினால் அவள் தங்கியிருந்த குடிலைச் சுற்றி கோடுபோட்டார். அந்த கோட்டிற்கு ""லட்சுமண்ரேகா'' என்றுபெயர். "ரேகா' என்றால் "கோடு'. தன் அண்ணியிடம் லட்சுமணன்,""தேவி! நான் பாதுகாப்புக்காக இடும் இந்தக்கோட்டை எக்காரணம் கொண்டும் தாண்டாதீர்கள்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். 
பிச்சைக்காரன் வேடமிட்டு வந்த ராவணனால் லட்சுமணன் போட்டகோட்டைத் தாண்டமுடியவில்லை. கோட்டில் காலை வைத்த ராவணனை நெருப்பு சுட்டெரித்தது. ""அம்மா! பிச்சையிடுங்கள்!'' என்று குரல் எழுப்பினான் ராவணன். சீதையும் பிச்சையிடுவதற்காக லட்சுமணன் இட்டகோட்டைத் தாண்டினாள். ராவணன் தன் சுயரூபத்தைக் காட்டி சீதையை இலங்கைக்கு சிறையெடுத்தான். பெண்கள் வரையறை வகுத்துக்கொண்டு வாழ்வது கணவருக்கும், குடும்பத்துக்கும் நல்லது என்ற கருத்தில் இந்தச்சம்பவம் விவரிக்கப்படுகிறது.

Tuesday, October 16, 2012

துளசி

துளசி 
தெய்வ வழிபாட்டுக்குரிய பல  தாவரங்களில் ஒன்று "துளசி'. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் "துளசி' என்று பெயர். துளசிக்கு "விஷ்ணுப்பிரியா' என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான் மாலையாக மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று.